தினக்குரல் பத்திரிகையில் வெளிவந்த எனது கவிதை....
Friday, March 30, 2012
Wednesday, March 21, 2012
மழைக்காலம்....
செந்தமிழ் மெட்டெடுத்து
கருவானில் ஊற்றெடுத்து
மாரிமகள் பாடுகிறாள்
மண்ணை தொட்டு முத்தமிட்டு...
மேகக் கூட்டத்தின் காதல்
மோகத்தின் உச்சத்தில்
உருவெடுக்கும் மழைத் தாரகைகள்
ஊற்றெடுக்கும் காலம்
அழகிய மழைக்காலம்...
ஏர் பிடித்து உழுகின்றவன்
நாற்றுதனை நட்டு விட்டு
நீ வரும் காலதிற்காய்
காத்திருப்பான் வான் பார்த்து
கார் மேகம் முகம் பார்த்து
களிப்புறுவான் மெல்ல...
மழை கண்டால் மண் குளிரும்
மக்கள் மனமும் குளிரும்
பசி தீரும் பஞ்சம் தீரும்
பாமரன் ஏக்கமும் தீரும்
பட்டு விட்ட மரங்களும்
மொட்டு விட்ட செடிகளும்
நாணித் தலை குனியும்
செழிப்பிழந்த கொடிகளும்
முகம் மலர்ந்து துளிர் விடும்
மழையன்னை அமுதத்தாயே...
வண்டினங்கள் இசைபாட
வண்ண மயில் தானாட
வான மகள் வாழ்த்துகிறாள்
வையகத்தை வாழ்க வென்று
விண்ணுலகத் தேவதை
மண்ணுலகத் தேவனுடன்
இரண்டறக் கலந்திடும் நேரம்
இசைத்திடும் இடி முழக்கங்கள்
பச்சைப் பட்டாடை விரித்தது போல்
புல் படர்ந்திருக்கும் தரையிலே
விட்டுப் போக மனமில்லாமல்
தங்கி விடும் சில துளிகள்...
காடு கனிந்திடும்
நாடு வளம் பெறும்
காற்றும் குளிர்ந்திடும்
தென்னங் கீற்றும் இசைத்திடும்
அழகிய மழைக்காலம் தனிலே...
மலர்க் கூட்டம் பூத்துக் குலுங்கும்
மாலை வந்ததும் மணம் பரப்பும்
வாடைக் காற்றும் கானம் பாடும்
அதற்கு வயல் வெளிகளும்
தலையசைக்கும்
இத்தனை செல்வமும்
இயற்கை அன்னை உன்னிடத்தில்
இருந்த போதிலும் சில சமயம் நீ
சீற்றம் கொள்வதும் ஏன் ?
மானிடத்தில்..
கெட்டது போதும் உலகத்திலே
இனி கேட்பதை கொடுக்கட்டும்
உன் வருகை...
பிரியமுடன்:உஷா நிலா
Sunday, March 18, 2012
Wednesday, March 14, 2012
விடியலைத் தேடும் பூபாளம்....
கோடைகால மணற் கிடங்காய்
எம் மக்களின் வாழ்வியல்
எப்போது மாறும் இந்த நிலை
என ஏங்கும் பல உள்ளங்கள்?
புடம் போட்டுத் தேடினாலும்
புரியவில்லை இந்த வறுமை நிலை
விலை வாசியின் ஏற்றத்தால் தினமும்
விரத நிலை பல வீட்டில்...
தான் ஈன்ற கன்றை
தாரை வார்த்துக் கொடுப்பதற்கும்
தானே போராடி நிற்கும் தாய்
தள்ளாடுகிறாள் சீதனக் கொடுமையால்...
மாறுமா இந்த நிலை என பல
மனங்கள் சிந்தித்தால் மட்டும் போதுமா..?
சிந்தித்த மனங்கள் எல்லாம் ஒன்றாகி
வென்றிட வேண்டாமா இந்த பிரபஞ்சத்தை
நாளைய சமுதாயம் நம் வரலாறு கூற
இன்றைய சம்பவங்கள்
உனக்கு சரித்திரமாகட்டும் தோழா...
உழைப்பால் உயர்ந்தவர்கள் கோடி இந்த
உண்மையைப் புரிந்து
உயர்ந்திடு வாழ்வைத் தேடி...
சோம்பலாய் இருப்பவர்களை நம்பி
சோரம் போகாதே தம்பி...
சிந்தனைகளை சிதறடித்து எம்மை
சீர்குலைக்கும் சீரற்ற
எண்ணங்களை ஒழிப்போம்...
எத்தனை செல்வம் தான்
இயற்கை அன்னையிடம்
அதைச் செழிப்புறச் செய்யவும்
தயக்கமேன் மனிதா ?
அகதிகளின் அவல நிலையோ எம்
அகக் கண்களில் அனல் பொறியாய்...
தான் மட்டும் வாழ்ந்தால் போது மென்றால்
எதிர்கால சகோதரத்துவம்
எப்படிப் போவதோ...?
ஒன்றிணைந்தோம் ஒரே தேச மக்கள் என்று
ஒருமித்த கரங்கள் எல்லாம் ஓங்கினால்
ஒருநாளும் பஞ்சமில்லை எம் நாட்டில்
உதிரத்தை உரமாக்கி உயர்ந்திடு வாழ்வில்
விடியும் இந்த பூபாளம்
நாளை உன் வாழ்வில்...
உ. உஷா (நிலா)
Saturday, March 10, 2012
அலைகளுக்கு திரும்பிப் போக இஷ்டமில்லை...
உன் கால் தடம் படாததால் அலைகளுக்கு
திரும்பிப் போக இஷ்டமில்லை...
சிம்மாசன பதவியேற்றம் நீ
அமர்ந்த கதிரைகளுக்கெல்லாம்...
உன் பார்வை பட்டு தானோ சூரியன்
ஒளித்தொகுப்பு செய்கிறது...
நீ அருகில் இருக்கையில் என்
வார்த்தைகளுக்கு ஊரடங்கு சட்டம்...
நிலவுக்கும் நித்திரையில்லை உன் நினைவால்...
சந்திரனில் குடியேற விஞ்ஞானம் முயற்சி...
உன் மடியில் இளைப்பாற கோள்கள் எல்லாம் போட்டி...
இவைகளுக்கில்லா பெருமை எனக்கு...
நீ கிடைத்ததில் உன்டான மகிழ்ச்சி....
பிரியமுடன்:உஷா நிலா
பிரியமுடன்:உஷா நிலா
Wednesday, March 7, 2012
மகளிர்க்காக...
பெண்ணும் பொன்னும் ஒன்று
அதை உணர வைத்தோம் இன்று...
மென்மையான பெண்மையிலே மெய்ப்பார்க்கும்
உன் அழகையல்ல அகத்தையே...
அடுப்பூதும் பெண்ணுக்கும் படிப்பெதற்கு
ஆடவன் சொன்னான் அன்று....
புது நூற்றாண்டில் பற்பல புதுமைகள்
படைத்தது பெண்ணினம் இன்று...
உதிரத்தை உரமாக்கி தன் சேய்க்கு
உணவளித்த தாயினமும் இங்கு...
மகளிர் தினத்தில் உயர்ந்து நிற்கின்றது இன்று...
பெண் படைப்புகளோ பலருக்கு
பாடப்புத்தகமானதும் உண்டு ...
பெண் பெருமை கூறும் பல வரலாறுகள்
கண்டு மனிதன் மாறியதும் உண்டு...
பெண்ணினம் பெற்ற பெருமையிலே
அன்னை தெரேசாவும்
அடங்கும் அவனியிலே...
ஆயிரம் அறிஞர்கள் பெண்களிலே...
அரசியல் வென்றதும் உண்டு அகிலத்திலே...
மகளிர் பெருமை கூறும் இந்நாளிலே
மனம் திறந்து வாழ்த்துவோம் மங்கையை...
பிரியமுடன்:உஷா நிலா
Tuesday, March 6, 2012
உன் பெயர் சொன்னால்..........
உன் பெயர் சொன்னால் புல்லாங்குழல் கூட
காற்றில்லாமலே கவிதை வாசிக்கும்...
உன் இதயம் கேட்டு நூறு ரோஜா தோட்டங்கள்
விண்ணப்பித்த போது உன் மனது எனக்கு மட்டும் மழை தந்தது...
ஆயிரம் பேர் உன்னை பார்த்தால் ஆயிரத்தொரு
கடிதங்கள் உன் முகவரியில் மொய்க்கும்...
அதில் ஒன்று கடவுளின் விண்ணப்பமாகும்...
அடுத்த பௌர்ணமி பார் அதில் என் இதயம் தெரியும்...
பிரியமுடன்:உஷா நிலா
பனித்துளி போல் .......
இலை மேல் விழும் பனித்துளி போல் நெஞ்சில்
எழுவது உண்மைக் காதல் இல்லை....
சிப்பியில் விழும் மழைத்துளி போல்
நெஞ்சில் வருவதே உண்மை காதல்...
காதலர் சிந்திய கண்ணீர் துளியால்
கடல் நீர் உப்பாய் மாறியதன்றோ?
கடலில் அலைகள் ஓய்வதில்லை காதலும் அது
போல் இதுவே உண்மை...
காதலும் ஒரு வகை தெய்வீகம் இதை
காத்திட முழங்கும் காதலர் தினம்...
காதலின் முடிவு மரணமென்றால்
அதை மாற்றி காட்டிட சபதம் எடுப்போம்...
முதலில் வெறுக்கும் இதயம் அதன்
முடிவில் இருக்கும் உன் இதயம்.
பிரியமுடன்:உஷா நிலா
மேகத்துக்கு ஒரு நாள்
மேகத்துக்கு ஒரு நாள் தாகம் எடுக்கும்...
தாகம் எடுத்தது கடல் நீர் குடிக்கும்...
உனக்கும் ஒரு நாள் காதல் பிறக்கும்...
உடனே உன் மனம் என்னை நினைக்கும்...
காதலுக்கன்று சுதந்திரத் திருநாள்...
என் கனவுக்கும் அன்றே விடுமுறை வரும் நாள்...
புத்தகப் புழுவாய் இருந்தேன் முன்னாள்...
புத்தகம் திறக்க மறந்தேன் உன்னால்...
இதயம் பிடிப்பது குறிக்கோள் என்றே
இரவில் படிப்பதை நிறுத்தினேன் அன்பே....
பிரியமுடன்:உஷா நிலா
உன் இதயம் திறப்பது...
சூரியன் எழுந்து வரும் திசை கிழக்கு...
நீ எழும் திசை தான் என் உயிர் கிழக்கு...
முகத்திரையை மெல்ல நீ விலக்கு...
இல்லை தொடரும் உன் மீது என் விழி வழக்கு...
என் கைகள் தொடும் தூரம் உன் இதயம் இருக்கு...
என் விரல் தொட்டுப் பார்த்திட விரதம் இருக்கு...
வழி விட்டால் தானே உன் இதயம் திறப்பது அன்பே...
பிரியமுடன் உஷா நிலா
பாடம் அறிந்தவன் நீயே....
அறிவியல் பாடம் அறிந்தவன் நீயே....
காதல் ஆட்சியில் உயிர் கொடுத்து காத்திடுவாயே...
புவியியல் பாடமும் புரிந்தவன் நீயே...
காதல் விதை அள்ளி நெஞ்சில் விதைத்திடு உடனே...
சரித்திரம் சரிவர கற்றவன் நீயே...
காதல் சரித்திரம் எழுதிட சம்மதமளிப்பாய்...
வேதியல் பாடம் வென்றவன் நீயே...
காதல் அணுக்களை குருதியில் கலந்திட வா...
கணக்கினை கரைத்து குடித்தவன் நீயே....
காதலை காதலால் பெருக்கிடு உடனே....
உன் தாய்மொழி தமிழ் மொழி, ஆங்கிலம் பொதுமொழி...
இருமொழி எடுத்து உன் காதலை முன்மொழி...
இத்தனை பாடம் படித்திருந்தாலும் இருக்குது இன்னொரு முக்கிய பாடம்...
எத்தனை பாடம் படித்திருந்தாலும் பருவத்தில் படிக்கனும் காதல் பாடம்...
பிரியமுடன் உஷா நிலா
Sunday, March 4, 2012
Subscribe to:
Posts (Atom)














