தினக்குரல் பத்திரிகையில் வெளிவந்த எனது கவிதை....

Wednesday, March 14, 2012

விடியலைத் தேடும் பூபாளம்....



கோடைகால மணற் கிடங்காய்
எம் மக்களின் வாழ்வியல்
எப்போது மாறும் இந்த நிலை
என ஏங்கும் பல உள்ளங்கள்?
 புடம் போட்டுத் தேடினாலும் 
புரியவில்லை இந்த வறுமை நிலை
விலை வாசியின் ஏற்றத்தால் தினமும்
 விரத நிலை பல வீட்டில்... 
தான் ஈன்ற கன்றை 
தாரை வார்த்துக் கொடுப்பதற்கும்
தானே போராடி நிற்கும் தாய்
தள்ளாடுகிறாள் சீதனக் கொடுமையால்...
மாறுமா இந்த நிலை என  பல 
மனங்கள் சிந்தித்தால் மட்டும் போதுமா..?
சிந்தித்த மனங்கள் எல்லாம் ஒன்றாகி
வென்றிட வேண்டாமா இந்த பிரபஞ்சத்தை 
நாளைய சமுதாயம் நம் வரலாறு கூற


இன்றைய சம்பவங்கள் 
உனக்கு சரித்திரமாகட்டும் தோழா...
உழைப்பால் உயர்ந்தவர்கள் கோடி  இந்த
உண்மையைப் புரிந்து 
உயர்ந்திடு வாழ்வைத் தேடி...
சோம்பலாய் இருப்பவர்களை நம்பி
 சோரம் போகாதே தம்பி...
சிந்தனைகளை சிதறடித்து  எம்மை
 சீர்குலைக்கும் சீரற்ற 
எண்ணங்களை ஒழிப்போம்...
 எத்தனை செல்வம் தான் 
இயற்கை அன்னையிடம் 
அதைச் செழிப்புறச் செய்யவும் 
தயக்கமேன் மனிதா ?

அகதிகளின் அவல நிலையோ  எம் 
அகக் கண்களில் அனல் பொறியாய்...
 தான் மட்டும் வாழ்ந்தால் போது மென்றால்
எதிர்கால சகோதரத்துவம் 
எப்படிப் போவதோ...?
ஒன்றிணைந்தோம் ஒரே தேச மக்கள் என்று
ஒருமித்த கரங்கள் எல்லாம் ஓங்கினால்
ஒருநாளும் பஞ்சமில்லை எம் நாட்டில் 
உதிரத்தை உரமாக்கி உயர்ந்திடு வாழ்வில்
 விடியும் இந்த பூபாளம் 
நாளை உன் வாழ்வில்...

உ. உஷா (நிலா)

No comments:

Post a Comment