செந்தமிழ் மெட்டெடுத்து
கருவானில் ஊற்றெடுத்து
மாரிமகள் பாடுகிறாள்
மண்ணை தொட்டு முத்தமிட்டு...
மேகக் கூட்டத்தின் காதல்
மோகத்தின் உச்சத்தில்
உருவெடுக்கும் மழைத் தாரகைகள்
ஊற்றெடுக்கும் காலம்
அழகிய மழைக்காலம்...
ஏர் பிடித்து உழுகின்றவன்
நாற்றுதனை நட்டு விட்டு
நீ வரும் காலதிற்காய்
காத்திருப்பான் வான் பார்த்து
கார் மேகம் முகம் பார்த்து
களிப்புறுவான் மெல்ல...
மழை கண்டால் மண் குளிரும்
மக்கள் மனமும் குளிரும்
பசி தீரும் பஞ்சம் தீரும்
பாமரன் ஏக்கமும் தீரும்
பட்டு விட்ட மரங்களும்
மொட்டு விட்ட செடிகளும்
நாணித் தலை குனியும்
செழிப்பிழந்த கொடிகளும்
முகம் மலர்ந்து துளிர் விடும்
மழையன்னை அமுதத்தாயே...
வண்டினங்கள் இசைபாட
வண்ண மயில் தானாட
வான மகள் வாழ்த்துகிறாள்
வையகத்தை வாழ்க வென்று
விண்ணுலகத் தேவதை
மண்ணுலகத் தேவனுடன்
இரண்டறக் கலந்திடும் நேரம்
இசைத்திடும் இடி முழக்கங்கள்
பச்சைப் பட்டாடை விரித்தது போல்
புல் படர்ந்திருக்கும் தரையிலே
விட்டுப் போக மனமில்லாமல்
தங்கி விடும் சில துளிகள்...
காடு கனிந்திடும்
நாடு வளம் பெறும்
காற்றும் குளிர்ந்திடும்
தென்னங் கீற்றும் இசைத்திடும்
அழகிய மழைக்காலம் தனிலே...
மலர்க் கூட்டம் பூத்துக் குலுங்கும்
மாலை வந்ததும் மணம் பரப்பும்
வாடைக் காற்றும் கானம் பாடும்
அதற்கு வயல் வெளிகளும்
தலையசைக்கும்
இத்தனை செல்வமும்
இயற்கை அன்னை உன்னிடத்தில்
இருந்த போதிலும் சில சமயம் நீ
சீற்றம் கொள்வதும் ஏன் ?
மானிடத்தில்..
கெட்டது போதும் உலகத்திலே
இனி கேட்பதை கொடுக்கட்டும்
உன் வருகை...
பிரியமுடன்:உஷா நிலா



Waw super i like it
ReplyDelete